வாரம் ஒரு ஆசிரியர் தினம் ஒரு மாணவர் ஆசிரியர் முத்துக் குமரன் மாணவர் ரூபன் நாத்
வாரம் ஒரு ஆசிரியர் ,தினம் ஒரு மாணவர் தொடரில் இன்று பண்ருட்டி அரசு மேனிலைப் பள்ளி ஓவியஆசிரியர் முத்துக் குமரன் அவர்களின் மாணவர் ரூபன் நாத்
அடுத்து இன்றைய தினப்பதிவில் இடம் பெறும் மாணவர் P.ரூபன் நாத்..இவரும் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்தான்.
சுயம்பு ஓவியரான இவர் ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனின் செதுக்கலில் இப்போது இன்னும் மிளிர்கிறார்.
போர்ட்ரெய்ட் என்னும் மனித உருவங்கள் வரைவதில் படு சமர்த்தர். பென்சில் ட்ராயிங் எக்ஸ்பர்ட்... குறிப்பாக ஸ்டெட்லர், சார்க்கோல் வகைப் பென்சில்கள் மற்றும் கலர் பென்சில்கள் கொண்டு வரைவதில் மிளிர்ந்து வருகிறார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மட்டுமே பண்ருட்டி அரசுப் பள்ளியில் படிக்க முடிந்ததில் மிக வருத்தம் இவருக்கு. இன்னும் முன்னாள் இங்கு வந்து சேர்ந்திருந்தால் தன் ஆசிரியரிடம் இன்னும் நிறைய நுட்பங்களைக் கற்றுக்கொண்டிருக்கலாமே என்கின்ற கவலைதான் அது.
தான் பள்ளியில் படிக்கும்போதே தனி நபர், மணமக்களின் படங்கள் , பிறந்தநாளுக்கான படங்கள் என வரைந்து குறைந்த அளவு கட்டணம் பெற்று சம்பாதிக்கவும் செய்துவருகிறார்.
மேலும் தன் மாமா ஒரு தொழில் முறை ஃபோட்டோகிராஃபர் என்பதால் சிறு வயதிலேயே கேமராவைக் கையாளும் திறமையும் கைகூட , அத்துடன் ஃபோட்டோஷாப் எனும் கணினி வரைகலையிலும் சிறந்து விளங்குகிறார்.
சமீபத்தில் தன் ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் அவர்கள் தலைமையில், சக மாணவர்களான ஹரிநாத், குணசீலன், திருநந்தகுமார் ஆகியோருடன் கோடியக்கரையில் நடைபெற்ற நான்கு நாள் ஒளிப்படப் பயிலரங்கில் பங்குபெற்று பல்வேறு நுணுக்கங்களைக் கற்று தன்னை அப்டேட் செய்துகொண்டிருப்பதோடு அங்கு நடந்த ஒளிப்படப் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று பாராட்டையும், பரிசையும் பெற்றவர்.
இப்பொழுது ஓவியக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருக்கிறார். நுழைவுத்தேர்வுகள் எழுதி முடிவுக்குக் காத்திருக்கிறார். சென்னை அல்லது புதுச்சேரியில் இடம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சிறப்புகளை வளரும்போதே பெற்றிருக்கின்ற ரூபன் நாத்தை வாழ்த்திப் பேச விருப்பமா?
இதோ அவரது தொடர்பு எண்:
9943694384
பி.கு: இதோ இந்தப் பதிவை நான் முடிக்கும் நேரத்தில் ஆசிரியர்
முத்துக்குமரனிடம் இருந்து ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் .புதுவை BPK என்கின்ற பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு & நேர்காணலில் அவரது பள்ளி மாணவர்கள் மூவரும் மெரிட்டில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்களாம். அவர்களுள் இக்கட்டுரையின் நாயகன் ரூபன்நாத் தரவரிசைப்பட்டியலில் 5- ஆம் இடம் பிடித்திருக்கிறார்.
இதற்கும் சேர்த்து வாழ்த்துகள் ரூபன்நாத்...