சாதனை மாணவர்கள் பிரசன்ன சிவா & ஜீவா


இதுவரை ஓவியக்கலையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பார்த்து மகிழ்ந்த நாம் இனி இசைத்துறையில் திறன் பெற்ற மாணவர் ஒருவரையும் ,
யோகாசனத்துறையில் திறன் பெற்ற மாணவர் ஒருவரையும் சந்திப்போமா?
முதலில் இசைத்துறை மாணவர் பிரசன்ன சிவாவைப் பார்ப்போம்.

இவர்தான் பிரசன்ன சிவா. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். முன்பே தனக்கு  கேள்வி ஞானத்தில் ஒரளவு பாடத் தெரியும் என்றாலும், தனது ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனை சந்தித்ததும்தான் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது என்று சொல்கிறார் இவர். தன் இசைத்திறன் தெரிந்ததும் பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழா கொண்டாடும் சமயத்தில் அவரது பாடலான துன்பம் இல்லாத நிலையே சக்தி என்ற பாடலை அறிமுகப்படுத்தி, அதனைப்  பாடுவதற்கு பயிற்சியும் அளித்து பள்ளியின் விழாவிலும், தமெரிக்கா டிவி மற்றும் புதுவை கவிதை வானில் கவிமன்றம் நடத்திய சாதனை நிகழ்விலும் பாட 
வைத்தாராம் ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன். இத்தனைக்கும் அவருக்கும் கர்நாடக இசையில் முறையான பயிற்சி எதுவும் கிடையாது. எல்லாம் கேள்வி ஞானம்தான்.

அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் புதுவையில் உள்ள பாரதியாருடன் தொடர்பு உடைய இடமான குயில் தோப்பில்  பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவில் , பாரதியாரின் கொள்ளுப்பேத்தியான திருமதி உமா பாரதி அவர்கள் முன்னிலையிலும், பாரதிதாசனின் பேரன் உயர்திரு பாரதி அவர்களின் முன்னிலையிலும் அந்தப் பாடலைப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்
அன்று முதல் இன்று வரை திருமதி உமாபாரதியின் நட்பு தொடர்கிறதாம்.

அத்துடன் நில்லாது கலா உத்சவ் என்னும் போட்டியில் கர்நாடக இசைப்பிரிவில், வாய்ப்பாட்டில் - ஜகத் ஜனனி என்னும் பாடலைப் பாடி மாவட்ட அளவில் முதல் பரிசைப் பெற்றதுடன் சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் 
நடைபெற்ற மாநில அளவிலான 
போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இந்தப் பாடலைப் பாடச்சொல்லி ஆலோசனை கூறி , அதற்கான பயிற்சியும் அளித்தவர் ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் அவர்கள்தான்  .

இதன் பிறகு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு விடுமுறையின்போது ஒரு இசையாசிரியரிடம் முறைப்படி பயிற்சிக்குச் சென்றும் கூட சூழ்நிலை காரணமாக மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சியை அவரால் தொடர முடிந்திருக்கிறது.

ஆனால் அந்த குருவின் உதவியால் ஒருசில திருமண நிகழ்வுகளிலும், கோவில் நிகழ்வுகளிலும் பாடத் தொடங்க, அதன் மூலம் இவரின் குரலும், பாடும் விதமும் சற்று பரவ ஆரம்பிக்க, மேலும் சிலரின் உதவியால் அடுத்தடுத்து சில ஆன்மீக நிகழ்வுகளிலும் ,ஆன்லைன் நிகழ்வுகளிலும் பாடிவருகிறார் நம் பிரசன்ன சிவா.

இவரது தாயும் தந்தையும் இவருடைய
இசை வளர்ச்சியில் மிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பள்ளியில் நடக்கும் எந்த நிகழ்வில் தங்கள் மகன்கள் பாடினாலும் அந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தவறாமல் வந்துவிடுவாராம் பிரசன்ன சிவாவின் அம்மாவும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அத்தனை பேரும் இவர்கள் போல் இருந்துவிட்டால்,அரசுப் பள்ளிகளின் கல்வி மற்றும் கலைசார் வளர்ச்சி என்பது தனியார் பள்ளிகளை மிஞ்சிவிடும் என்கிறார் ஆசிரியர் முத்துக்குமரன்.

இவரது பள்ளியில் ஏதேனும் நிகழ்வு எனில் பிரசன்ன சிவாவுக்கு  அதில் ஒரு பாடலைப் பாட வாய்ப்பு தந்து விடுகிறார்கள்.இவரது திறமையைப் பாராட்டி பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் இவரை அழைத்து விருது அளித்து  சிறப்பு செய்துள்ளது.

இவர் வாய்ப்பாட்டில் வளர்ந்துவரும் கலைஞர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அவரது தம்பி ஸ்ரீகாந்த் சிவா கீபோர்டு வாசிப்பதிலும், வயலின் வாசிப்பதிலும் பயிற்சி பெற்று வருகிறார் என்பது மிகக் குறிப்பிடத்தக்கது.

இப்படி இசைத்துறையில் வளர்ந்துவரும் சாதனையாளரான பிரசன்ன சிவாவை பாராட்டி வாழ்த்துங்கள்...

அவரிடம் பேசி வாழ்த்த வேண்டுமெனில் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

7010326660



அடுத்து நாம் சந்திக்கவிருப்பது  யோகாசாதனை மாணவர் 


இவர்தான்  V. ஜீவா. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்  பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

சமீபத்தில்  பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் நடத்திய முப்பெரும் விழாவில் இவர் விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டு இருக்கிறார். 

இவருக்கு விருது அளிக்கப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா? 
தனது ஆர்வத்தால் , இரண்டாம் வகுப்பிலிருந்தே தனிப்பட்ட முறையில் யோகாசனம் பயின்று 50 வகையான யோகாசனங்களை செய்யக் கற்றிருக்கிறார். 

அதுமட்டுமல்லாது இதற்கு முன்பும், தான் பயின்ற பண்ருட்டியை அடுத்த செம்மேடு - பால போத பவனம் பள்ளி மற்றும் பண்ருட்டி , - சாரதா வித்யாலயா பள்ளிகளில் பயின்றபோது   மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான பல்வேறு யோகாசனம் தொடர்பான போட்டிகளிலும்  பங்கேற்று பல முறை முதல்  பரிசுகளும், சான்றிதழ்களும், கோப்பைகளும் பெற்றிருக்கிறார்.

மேலும் இவர் NCC எனப்படும் தேசிய மாணவர் படையிலும் சேர்ந்து பயிற்சி எடுத்துவருகிறார்.

தேசிய அளவிலான யோகா போட்டிகளிலும் பங்கேற்கவும் தன்னை தயார் செய்து வருகிறார். இவரது பெற்றோர் இவருக்கு  சிறந்த முறையில் ஊக்கம் அளித்து வருகின்றனர்.

இவருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வரும் யோகா ஆசிரியர் உயர்திரு பாஸ்கர் அவர்களுக்கும்
ஊக்கப்படுத்தும் பெற்றோர்க்கும் வாழ்த்துகள்...

இதுபோன்ற பல்வேறு திறமைமிக்க மாணவர்களை அடையாளம் கண்டு பாராட்டி  ஊக்கப்படுத்தி வரும் கலையாசிரியர் முத்துக்குமரன் போன்ற ஆசிரியர்கள் இருக்கும் வரை ஜீவா மா போன்ற மாணவர்களின் திறன்கள் மிளிர்தலில் குறைவேதும் இருக்காது...

இதோ இந்த சாதனை மாணவர் V. ஜீவா தனது யோகாசனக் கலையில் மேலும் சிறந்து விளங்கி  இன்னும் பல வெற்றிகளும்  சிறப்புகளும் பெற வாழ்த்துங்கள் நண்பர்களே...

ஜீவாவை வாழ்த்திப் பேச வேண்டுமா?

அப்படியானால் , 6369102578  என்ற எண்ணில் பேசுங்கள்.

ஜீவாவைப் போலவே பல மாணவர்கள் இருக்கிறார்கள் ... பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்..
ஹரிநாத் போல, ரூபன் நாத் போல, குணசீலன் போல , திருநந்தகுமார் போல, விக்னேஷ் போல, கோகுல் நாத் போல, கோகுலன் போல ... ஓவியக்கலையில் சிறந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேல் இருக்கிறார்களாம் ...அபிஷேக், கிரிதரன், மாதேஷ்வரன், ரஞ்சித், சுதர்சனன், அமிர்தகடேஸ்வரன், புகழேந்தி, கிர்ஷாத், நந்தகுமார் , வெங்கடேஷ்....என நீண்டுகொண்டே போகிறது .

விளையாட்டு, மனனம் செய்தல், பேச்சு, யோகா, பாட்டு பாடுதல்,தாளம் போடுதல், தப்பு அடித்தல்,மேளம் கொட்டுதல், சிலம்பம் சுழற்றுதல்  போன்று பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இது போன்று பலர் அரசுப் பள்ளிகளில் எங்கும் விரவிக் கிடக்கிறார்கள்.. நமக்கு வேண்டியதெல்லாம் இவர்கள் போன்ற தனித் திறனாளர்களைக் கண்டறிந்து களம் அமைத்துத் தரும் ஆசிரியர்கள்தான்...

இதோ முத்துக்குமரன்  போன்ற ஆசிரியர்கள்தான் குப்பையில் கிடக்கும் மாணிக்கங்கள், வைரங்கள் போன்ற பல்வேறு திறன் கொண்ட மாணவர்களைத்  தேடிக் கண்டுபிடித்து வெளிக்  கொண்டுவந்து பட்டைதீட்டி ஜ்வலிக்கச் செய்கின்றனர்.

அப்படிப்பட்ட ஜ்வலிக்கும் மாணிக்கங்களை, வைரங்களை அடையாளம் கண்டு பொதுவெளிக்குக் கொண்டுவந்து புகழ் வெளிச்சம் பாய்ச்சுவதற்குத்தான் , உற்சாகப்படுத்துவதற்குத்தான் இது 
போன்ற பதிவுகள எல்லாம்.

மாணவர்களை மட்டுமல்லாது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியப் பெருந்தகைகளையும் பாராட்டி  உற்சாகப்படுத்துவதும் மிக முக்கியம் அல்லவா...?

அதை நோக்கித்தான் பயணப்படுகிறது...
அரசுப் பள்ளிகளை ஆதரிப்போம் என்ற இயக்கமும்.

இந்த வாரம் முழுக்க  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசுப்பள்ளியின் ஆசிரியரைப் பற்றியும் மாணவர்கள் பற்றியும் பார்த்தோம்.இனி வரும் திங்கள் முதல் ஞாயிறு வரை வேறொரு அரசுப் பள்ளியைப் பற்றியும் , அப் பள்ளியின் ஆசிரியரைப் பற்றியும், அப்பள்ளியின் திறன் சார் மாணவர்கள் பற்றியும் பார்க்கப் போகிறோம்...தயாராக இருங்கள்..

Popular posts from this blog

தினம் ஒரு மாணவர் தொடர்..ஆசிரியர் குரல் அருணாசலம்